எரிபொருட்களின் விலையும், வாகனங்கள் வெளியேற்றும் புகையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கே வேட்டுவைக்கின்றன. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் பஸ் (எலக்ட்ரிக் பஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் புகையே இல்லாமல், குறைந்த ஒலியுடன் வலம்வரும் இந்த பஸ் மக்களுக்கு மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலுக்கும் உற்ற நண்பனாக மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் குறைந்த செலவில் அதிக லாபத்தையும் ஈட்டித் தரும் என்று பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவிக்கிறது. எனவே கர்நாடக அரசு இன்னும் நிறைய மின்சார பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சீன பேருந்து நிறுவனமான 'BYD' உருவாக்கி இருக்கும் இந்த மின்சார பஸ்ஸின் சாதக பாதகங்களை ஆராய 3 மாதங்கள் ஒத்திகைக் கால அளவு வகுக்கப்பட்டிருக்கிறது. 'தி இந்து' சார்பாக மின்சார பேருந்தில் ஏறி, ஒரு அலசல் பயணம் மேற்கொண்டோம்.
புகையில்லா வாகனம்!
பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கரும் புகையால் நகரின் சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகியுள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவின் பிற நகரங்களைக் காட்டிலும் பெங்களூரில் அதிக ஒலி மாசுபாடு ஏற்பட்டிருக்கிறது.
எனவே புகையை வெளியேற்றாத மின்சார வாகனங்களைப் பயன்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டது. இதன் தொடக்கமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 'மின்சார பஸ்' அறிமுகம் செய்யப்பட்டது. முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் இந்த பஸ்ஸில் இருந்து புகை முற்றிலும் வெளிவருவதில்லை.
அதிநவீன பஸ்
மற்ற பஸ்களைக் காட்டிலும் மின்சார பஸ்ஸில் பல்வேறு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பஸ்ஸின் முன் பக்கம், பின்பக்கம் என 2 பக்கங்களிலும் 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பேருந்தில் இருக்கும் பயணிகளை பாதுகாக்கவும், விபத்துகளில் இருந்து தப்பிக்கவும் முடியும். அதே போல ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே டிவி, இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் எல்.இ.டி. அறிவிப்புப் பலகையும், ஒலிபெருக்கியும், மின்சாரத்தின் மூலம் இயங்கும் கதவுகளும் இருக்கின்றன. 31 இருக்கைகள் மட்டுமே இந்த பஸ்ஸில் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இருக்கைகள் இதில் உள்ளன.
மின்சார பஸ்ஸில் இன்ஜின் ஆயில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எதுவும் தேவைப்படாது. அதே வேளையில் மற்ற வாகனங்கள் எழுப்பும் ஒலியை காட்டிலும் குறைந்த அளவிலான ஒலியை மட்டுமே மின்சார பஸ் எழுப்புகிறது. மேலும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த பஸ் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் மேடு,
பள்ளங்களில் அதிகம் குலுங்காமல் பயணிக்க முடியும். மேலும் விபத்தின் போது தப்பிக்கும் வகையில் அவசரகால கதவுகளும் பொருத்தப்பட்டிருக்கிறது.
எல்லா வகையிலும் சிறந்த வாகனம்
இந்த பஸ்ஸில் 540 வோல்ட் பேட்டரி (மின்கலம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 மணி நேரம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்தால் 250 கி.மீ. தூரம் பயணம் செய்யமுடியும். 3 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் தாராளமாக 100 கி.மீ. பயணிக்கலாம். அதிகபட்சமாக 96 கி.மீ. வேகத்திலும், சராசரியாக 60-65 கி.மீ. வேகத்திலும் செல்லலாம். மின்சாரம் இல்லாத மின்வெட்டு நாட்களில் சோலார் பேனல்களின் மூலம் மின்சாரம் பெறும் வசதியும் உள்ளது.
பேட்டரியால் ஏற்படும் விபத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில் அயர்ன் (iron battery) பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் விலை ரூ.2.7 கோடி. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பேருந்துகளை விட விலை அதிகமாக இருப்பினும், இது அரசிற்கு அதிக லாபத்தை வழங்கக்கூடியது. ஏனென்றால் எரிபொருட்களை பயன்படுத்தும் பஸ்ஸில் 1 கி.மீ. தூரத்திற்கு 18 ரூபாய் செலவாகிறது. ஆனால் இந்த பஸ்ஸில் 1 கி.மீ. தூரத்திற்கு 7 ரூபாய் மட்டுமே செலவு ஆகிறது.
முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட இப்பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15-ம் அதிகபட்ச கட்டணமாக ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது.