தனது வங்கி பணியாளர்களிடம் பங்குகளை விற்பனை செய்ய பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 800 கோடி முதல் ரூ. 1,200 கோடியைத் திரட்ட முடியும் என நம்புகிறது. இருப்பினும் இப்புதிய முறையை அடுத்த நிதி ஆண்டில் செயல்படுத்த உள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
எவ்வளவு பங்குகள் ஊழியர்களுக்கு விற்பனை செய்வது என்பது பங்கின் விலையை முடிவு செய்த பிறகு தீர்மானிக்கப்படும் என்று கூறினார். இவ்விதம் பங்குகளை ஊழியர்களுக்கு விற்பனை செய்வதற்காக அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கோல்கத்தாவில் உள்ள டாடா மருத்துவ மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
வங்கியில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பங்குகளை வாங்கலாம். ஊழியர்களுக்கு சலுகை விலையில் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் 5 சதவீதம் உயர்ந்து எஸ்பிஐ பங்குகள் ரூ. 1,654-க்கு விற்பனையாயின.
எஸ்பிஐ-யில் அரசுக்கு 58.6 சதவீத பங்குகள் உள்ளன. ஊழியர்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஸ்டேட் வங்கியில் கடந்த நிதி ஆண்டு கணக்குப்படி 2.28 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
வாராக்கடன்
வாராக்கடன் அளவைக் குறைக்க தீவிரமான நடவடிக்கை கள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார். வாராக் கடனை வசூலிப்பதில் சில திட்டங்கள் வைத்திருப்பதாக அருந்ததி பட்டாச் சார்யா கூறினார். வாராக் கடனில் 5 சதவீதத்தை வசூலிப்பதில்தான் நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். நாங்கள் அளித்த கடனில் 95 சதவீதத்தை வசூலிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.