பிலிப்பின்ஸில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் போராளிகள் குழுவுக்கும் அரசுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இதன் மூலம் 40 ஆண்டு கால போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாரோ இஸ்லாமிக் விடுதலை முன்னணியினர் பெனினோ அகினோ அரசுடன் மணிலாவில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர். பாங்சமாரோ (முஸ்லிம்களின் தாயகம்) தொடர்பாக ஏற்பட்டுள்ள விரிவான ஒப்பந்தம் எங்களது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என விடுதலை முன்னணி தலைவர் முராத் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின்படி பிலிப் பின்ஸில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கென தன்னாட்சி தென் பிராந்தியம் உருவாக்கப்படும். இந்த தன்னாட்சி பகுதிக்கு 2016 க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். பிலிப்பின்ஸின் ஒட்டுமொத்த பரப்பில் 10 சதவீதம் கொண்டது பாங்சமாரோ பிராந்தியம். பிலிப்பின்ஸின் தெற்குப் பகுதி தீவுகளை உள்ளடக்கி தன்னாட்சி பிராந்தியம் கோரி 1970 முதலாக முஸ்லிம் போராளிகள் போராடி வந்தனர்.
இதனிடையே 2016ம் ஆண்டின் மத்திக்குள் அமைதி ஒப்பந்தம் நிறைவேற எந்த உத்தரவாதமும் இல்லை.அப்போதுதான் தனது 6 ஆண்டு கால பதவியை முடிக்கிறார் அகினோ.
செல்வாக்கு மிக்க கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள் ஒப்பந்தத்தை மீற தயக்கம் காட்டமாட்டார்கள் என்று சொல்லப்படுகிது. மேலும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வாய்ப்பு இருக் கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒப்பந்தத்தை விரும்பாத தீவிரவாதிகளும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று தெரிகிறது.