நாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இமாசலப் பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி. தொடக்கப் பள்ளி ஆசிரியரான நேகி, 1975-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 1951-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை நடைபெற்றுள்ள மக்களவைத் தேர்தல்களில் தவறாது வாக் களித்து வந்துள்ளார்.
தற்போது 16-வது முறையாக மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார். இது தவிர 11 முறை சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.
இவரை பாராட்டும் வகையில் மத்திய தேர்தல் ஆணையத்தின் வைரவிழாவின் போது அப்போதைய ஆணையர் நவீன் சாவ்லா, நேகியின் கிராமத்திற்குச் சென்று அவரை கவுரவித்தார்.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக நடிகர்கள் அமிதாப் பச்சன், ஆமீர்கான், அர்ஜூன் ராம்பால், தியா மிர்சா மற்றும் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் ஆகியோரை வைத்து வீடியோவை எடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், வாக்களிப் பதன் அவசியம் குறித்து ஷியாம் சரண் நேகி கருத்து கூறுவது போன்ற காட்சிகள் அமைந்த பிரச்சார வீடியோவையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த வீடியோக்கள் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. நடிகர்களைவிட, நேகிக்கு இணைய பயன்பாட்டாளர்கள் அதிக முக்கியத்துவம் அளித் துள்ளனர்.
நடிகர்களின் வீடியோக்களை பார்த்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கூட தாண்டாத நிலையில், சுமார் இரண்டரை நிமிடம் ஓடக் கூடிய நேகியின் வீடியோவை 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நேகி முதலிடம் பெற்றுள்ளார்.