தமிழ்நாட்டின் தேர்தல் மன்னன் மேட்டூர் பத்மராஜனைப் போல, ஒடிசாவில் இதுவரை 27 முறை தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய ஷ்யாம் பாபு சுபுதி (78) வரும் மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் நகரைச் சேர்ந்தவர் ஹோமியோபதி மருத்துவர் ஷ்யாம் பாபு சுபதி. நாட்டில் அதிகமுறை தேர்தலில் போட்டியிட்டவர் தாமாகத்தான் இருக்கவேண்டும் இலக்கு வைத்துக்கொண்ட சுபதி, 1957-லிருந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், முன்னாள் முதல்வர்கள் பிஜு பட்நாய்க், ஜே.பி. பட்நாயக் என பிரபலங்கள் பலரை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.
1957-ல் தொடங்கி, இடைத் தேர்தல் உள்பட மக்களவை தேர்தலில் 17 முறையும், சட்ட மன்ற தேர்தலில் 10 முறையும் போட்டியிட்டுள்ளார் சுபுதி. ஆனால் இதில் ஒருமுறை கூட பெபாசிட் தொகையை திரும்பப் பெற்றதில்லை அவர். எனினும் சளைக்காமல் தற்போது ஒடிசாவின் பெர்ஹாம்பூர், ஆஸ்கா மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஆயத்தமாகிவிட்டார்.
“தேர்தலில் சீர்திருத்தம் வேண்டும். பண பலமும் அதிகார பலமும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க வேண்டும். இதுவே எனது நோக்கம். இந்த நோக்கங்களுக்காக எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேர்தலில் போட்டியிடுவேன்” என்று கூறும் சுபுதி, “மக்கள் எல்லோரையும் வெறுத்துவிட்டனர். அதனால் இம்முறை எனக்கு வெற்றி நிச்சயம்” என்கிறார்.
வாகனங்கள், கட்- அவுட்கள் என பிரச்சார வெளிச்சம் இல்லா மல் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிக்கிறார் சுபுதி.
“பஸ், ரயில்களில் செல்லும் போது கூட வாக்கு சேகரிப்பேன். எனது பிரச்சார செலவு மிகவும் குறைவு. நல்ல உள்ளங்கள் பலர் எனக்கு உதவுகின்றனர்” என்கிறார்.