டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவில், 2014- ஆம் ஆண்டுக்கான 'வாழ்க்கைக்காக தண்ணீர் விருது' (Water for Life award) இந்தியா மற்றும சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்களை பாதுகாப்பதில் நிலையான நடைமுறைகளை மேற்கொண்டமைக்காக இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இது குறித்து சின்குவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உலக தண்ணீர் தின விழாவில் அதன் தலைவர் மிச்செல் ஜெராட் வெளியிட்ட அறிக்கையில், “ நீர் மேலாண்மை விருதை பெறும் இந்த இரு நாடுகளின் திட்டங்களும் எதிர்காலத்தில் நீர் மேலாண்மை கொள்கையை பின்பற்றுவதில் சிறந்த உதாரணங்களாக திகழும்" என்றார்.
நீர் மேலாண்மையில் சிறந்த பங்கேற்பு, தகவல் தொடர்பு, விழிப்புணர்வு மற்றும் கல்வி அமைப்பு நடவடிக்கைகள் என பல்வேறு நோக்கத்தில் இந்த விருது வருடம்தோறும் வழங்கப்படுகிறது.
இந்தியா முழுவதிலும் உள்ள தண்ணீர் பற்றாக்குறையை அடிப்படையாக கொண்ட டாடா நீர் கொள்கை திட்டத்திற்காக (Tata Water Policy Programme) இந்த விருது வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் தினசரி தண்ணீர் தேவையான 30 சதவீததை அடையும் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட NEWater திட்டத்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
நீர் மேலாண்மையில் பன்முக மற்றும் குறிப்பிடத்தக்க பங்கை இந்த சமூகம் மேற்கொள்ள பல தரப்பட்ட நடவடிக்கைகளை இந்த திட்டம் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.