பட்ஜெட் பற்றாக்குறையை இத்தாலி அரசு குறைக்கத் தவறியதற்கு ஐரோப்பிய மத்திய வங்கி (இசிபி) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் அமைப்பு பரிந்துரை செய்தபடி பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க இத்தாலி அரசு தவறி விட்டதாக இசிபி சுட்டிக் காட்டியுள்ளது.
2013-ம் ஆண்டில் பட்ஜெட் பற்றாக்குறையை 3 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாககக் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் இத்தாலி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அந்த இலக்கை இத்தாலி அரசு எட்டத் தவறிவிட்டதாக ஜின்குவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இசிபி குறிப்பிட்டுள்ளது.
பற்றாக்குறையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இத்தாலி அரசை இசிபி வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் இத்தாலியின் பொருளாதாரம் ஐரோப்பிய நாடுகளை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்த நிலை இத்தாலியில் காணப்படுகிறது.
2013-ம் ஆண்டு இத்தாலியில் 0.1 சதவீத வளர்ச்சியே நான்காம் காலாண்டில் எட்டப்பட்டது. இதனால் இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி 0.6 சதவீத அளவுக்கே 2014-ம் ஆண்டில் இருக்கும் என கூறப்பட்டது. இத்தாலியில் வேலையில்லாத் திண்டாட்டம் 12.9 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகையில் 42 சதவீதம்பேர் இளைஞர்களாவர்.
ஐரோப்பிய யூனியன் அமைப்பு இத்தாலி, ஸ்லோவேனியா, குரேஷியா ஆகிய நாடுகளின் நிதிநிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்நாடுகள் அதிக கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் பிற நாடுகளுடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் கிரேக்கத்துக்கு அடுத்தபடியாக இத்தாலி உள்ளது