சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காகப் போராடும் மஹா அல் முனீப் என்ற பெண்ணுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருது வழங்கி கவுரவித்தார்.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது முதற்கொண்டு உயர் கல்வி கற்பது வரை அனைத்து விஷயங்களுக்கும் குடும்ப ஆண்களின் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இந்த ஆணாதிக்கத்தை எதிர்த்து சவுதி அரேபியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள ஒபாமா குரல் கொடுப்பார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வெள்ளிக்கிழமை சவுதி மன்னர் அப்துல்லாவைச் சந்தித்த ஒபாமா, ஈரான் மற்றும் சிரியா மீது அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இரு நாடுகளும் நட்புறவோடுதான் உள்ளன என்று கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டில் குடும்ப வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் மஹா அல் முனீப் என்ற பெண்ணைச் சந்தித்தார் ஒபாமா.
உலகெங்கும் அநீதிக்கு எதிராகத் துணிச்சலாகப் போராடிய பெண்களுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பிக்கும். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 10 பெண்களில் மஹா அல் முனீஃப்பும் ஒருவர். அவரால் விருது வழங்கப்பட்ட நாளில் கலந்து கொள்ள முடியாததால் அந்தப் பெண்ணுக்கு ஒபாமா நேரில் விருது வழங்கினார்.
சவுதி அரேபியாவுக்கு ஒபாமா வந்த அதே நாளில், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து அந்நாட்டுப் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஒபாமா குரல் கொடுப்பார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.