ஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்றொன்று நிஜாமாபாதிலும் அமைய உள்ளது.
இந்த உணவு பதப்படுத்தும் பூங்கா அமைப்பதற்கான பணிகள் 2015-ம் ஆண்டு இறுதியில் முடிவடையும். ஆந்திர மாநில தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் முதன்மைச் செயலர் ஜே.எஸ்.வி. பிரசாத் இத்தகவலைத் தெரிவித்தார்.
நிஜாமாபாதில் அமைய உள்ள உணவு பதப்படுத்தும் மையம் வேளாண் பயிர்களை பாதுகாக்கவும், பீமாவரத்தில் உள்ள பூங்கா வேளாண் பொருள்களை பதப்படுத்தவும் உதவும். இந்த பதப்படுத்தும் மையங்கள் தலா ரூ. 120 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த மையத்தில் தொழிற்சாலைகள் அமைக்க வரும் நிறுவனங்களுக்கு போதிய மானிய உதவிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பூங்காவிலும் ரூ. 500 கோடிக்கான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.