வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்றுள்ள கடன் தொகை டிசம்பர் மாதம் 42,600 கோடி டாலராகும். இதில் அரசு பெற்றுள்ள கடன் தொகை மட்டும் 7,640 கோடியாகும் இது மொத்தக் கடன் தொகையில் 18 சதவீதமாகும். முந்தைய ஆண்டு டிசம்பரில் இது 8,170 கோடி டாலராக இருந்தது என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு இருந்த ஒட்டுமொத்த கடன் அளவு 21,110 கோடி டாலராகும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மூலமாக கடன் பத்திர வெளியீடு மூலம் நிதி திரட்டியதே கடன் அளவு அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய நிதி அமைச்சகம், வெளிநாட்டிலிருந்து கடன் திரட்ட அனுமதி அளித்தது. இதனால் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் முதலீடு செய்தனர். இதனால் எப்சிஎன்ஆர் டெபாசிட் அளவு உயர்ந்தது.
கால வரையறையுடன் கூடிய கடன் அளவு டிசம்பர் வரையான காலத்தில் 33,330 கோடி டாலராகும். கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8.1 சதவீதம் அதிகமாகும். குறுகிய கால கடன் அளவு 4.1 சதவீதம் குறைந்து 9,270 கோடி டாலராக இருந்தது.
டாலரில் திருப்பி அளிக்கவேண்டிய கடன் தொகை 63.3 சதவீதமாகும். இந்திய ரூபாயில் திருப்பி அளிக்க வேண்டிய கடன் தொகை 19.4 சதவீதமாகும். சிறப்பு கடன் அனுமதி பெறும் உரிமை (எஸ்டிஆர்) மூலம் திரும்ப செலுத்த வேண்டிய தொகை 7.1 சதவீதமாகும். ஜப்பானிய யென்னில் திரும்ப அளிக்க வேண்டிய தொகை 5 சதவீதமாகும். யூரோவில் திரும்ப செலுத்த வேண்டிய தொகை 3.1 சதவீதமாகும்.
இந்தியாவின் வெளிக் கடன் தொகையில் 69 சதவீதம் இந்தியாவிடம் உள்ள வெளிநாட்டுக் கரன்சி கையிருப்பு மூலம் ஈடு செய்ய முடியும். இந்தியாவுக்கு உள்ள வெளி நாட்டுக் கடன் அளவு, கட்டுக்குள் இருப்பதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.