பழம்பெரும் திரைப்பட நடிகை அஞ்சலி தேவி காலமானார். அவருக்கு வயது 86.
சமீப காலமாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி, கடந்த சில நாள்களாகவே சுவாசப் பிரச்சினையால் அவதியுற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று (திங்கள்கிழமை) சென்னையில் காலமானார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், வியாழக்கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இவருக்கு 2 மகன்கள். பேரக்குழந்தைகள் உள்ளனர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் அஞ்சலி தேவி. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெமினி ஆகியோர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய நூற்றாண்டு விழாவில் அவருக்குத் திரைத்துறையின் சாதனையாளர் பட்டம் வழங்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகில் உள்ள பெத்தாபுரத்தில் பிறந்த அஞ்சலி தேவி, தனது இளமைப் பருவத்திலேயே சென்னையில் குடியேறினார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இருப்பதையே பெருமையாக கருதியவர். பள்ளியில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மேடை நாடகங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியவர், தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
தெலுங்கிலிருந்து டப் செய்யப்பட்டு தமிழில் வெளியான 'மாயக்குதிரை' திரைப்படம் பெரும் வெற்றி அடைய தொடர்ந்து தமிழ்ப்பட வாய்ப்புகள் அவருக்கு குவியத் தொடங்கின. தமிழில் சொந்தக் குரலில் பேசி நடித்ததும் இவரின் அப்போதைய காலகட்டத்தில் இவரின் தனிச்சிறப்பாக பேசப்பட்டது. தமிழில் ஜெமினிகணேசனுடன் அதிக படங்களில் நடித்த அஞ்சலிதேவி 40, 50 களின் சிறப்பு நட்சத்திரங்களாக ஜொலித்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற புகழ்பெற்ற நடிகர்களோடும் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த சர்வாதிகாரி, சக்கரவர்த்தி திருமகள், மன்னாதி மன்னம் பெரும் பேரை வாங்கிக்கொடுத்த படங்கள். இன்றைய நாயகர்கள் ரஜினி, கமல் இருவரின் பலப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்பட நடிகர் சங்கத்தில் தலைவர் பொறுப்பில் இருந்த ஒரே பெண்மணி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. நடிகர் சங்கத்தின் 'லோகோ'வை வடிவமைத்து அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் பார்வைக்கு கொண்டுச்சென்று ஒப்புதல் வாங்கி நடிகர் சங்கத்தின் எம்பலமாக ஆக்கிய பெருமைக்கு உரியவர்.