இந்திய அமெரிக்க வம்சாவளி அமெரிக்கர் ராகேஷ் குரானா புகழ்மிக்க ஹார்வர்டு கல்லூரியின் டீன் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹார்வர்டு வணிகக் கல்லூரி (எச்பிஎஸ்) தலைமைப் பண்பு மேம்பாட்டுத் துறை பேராசிரியராகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகவியல் துறை பேராசிரியராகவும், ஹார்வர்டு கபோட் ஹவுஸின் துணை ஆசிரியராகவும் ராகேஷ் குரானா (46) பணியாற்றி வருகிறார்.
உலகின் பிரசித்தி பெற்ற ஹார்வர்டு கல்லூரியின் டீன் ஆக ராகேஷ் குரானா நியமிக்கப்பட்டி ருப்பது பெரும் கௌரவமாகும். ஹார்வர்டு கல்லூரியின் தற்போதைய டீனாக எவலின் ஹம்மண்ஸ் இருந்து வருகிறார். ராகேஷ் குரானா வரும் ஜூலை 1-ம் தேதி தன் பொறுப்பை ஏற்பார்.
ராகேஷ் குரானா தனது முனைவர் பட்ட ஆய்வை ஹார்வர்டு வணிகக் கல்லூரி, ஹார்வர்டு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒருங்கிணைந்து மேற்கொண்டார்.
ராகேஷ் குரானா குறித்து ஹார்வர்டு தலைவர் ட்ரூ ஃபாஸ்ட் கூறுகையில், “மிகச்சிறந்த பேராசிரியரான குரானா, ஒரு பட்டதாரி மாணவனாகவும், எச்பிஎஸ்ஸின் விருது பெற்ற பேராசிரியராகவும், இளநிலைப் பட்ட வகுப்பு ஆசிரியராகவும் அவரது அனுபவங்கள் மிகவும் பிரத்யேகமானவை. அவர் இக்கல்லூரியை வழிநடத்துவதற்கு அவரின் அனுபவங்கள் மிகவும் உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஹார்வர்டு வணிகக் கல்லூரியின் டீன் ஆக பொறுப்பு வகிக்கும் இந்தியர் நிதின் நொஹாரியா, ராகேஷ் குரானாவின் நியமனத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.