கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்தியதால், வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை:
* கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்துவது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு, தக்க அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும்.
* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபர், மன நலம் குன்றியவராக இருந்தாலோ அல்லது அவர் மனச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கலாம்.
* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும், இதர கைதிகளையும் தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.
* தூக்கு தண்டனை கைதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
* தூக்கு தண்ட்னை கைதியின் கருணை மனு குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த விபரம் குறித்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
* காலம் கடந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
* தூக்கு தண்டனை கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட சாத்தியம் உள்ளது என செய்தித் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.