Sunday, March 9, 2014

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் காப்புரிமை?

தமிழ்நாட்டின் நரசிங்கம்பேட்டைப் பகுதியில் தயாராகும் நாதஸ்வரங்களுக்கு புவிசார் காப்புரிமை கோரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட நுண்கலை பாதுகாப்பு அமைப்பு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
மிக விரைவில் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் காப்புரிமை கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த முன்னெடுப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், அத்துடன் சேர்த்து நாதஸ்வர வாசிப்புக்கு தேவையான சீவாளிக்கும் சேர்த்து இந்தக் காப்புரிமை வழங்கப்படுவதும் அவசியமாகும் என்றும் பிபிசி தமிழோசையிடம் மூத்த நாதஸ்வர கலைஞர் இஞ்சிக்குடி சுப்ரமணியம் தெரிவித்தார்.
நரசிங்கம்பேட்டைப் பகுதியிலும் இப்போதும் கூட மிகக் குறைந்த கலைஞர்களே நாதஸ்வரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அது கவலையளிக்கும் விஷயமாக இருந்தாலும், கோவில்கள் இருக்கும்வரை நாதஸ்வரமும் அதன் இசையும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் தயாராகும் நாதஸ்வரத்தில் ஒலியின் தன்மை மிகவும் துல்லியமாக இருக்கும் என்பதே அதன் சிறப்பு என்றும், அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுப்படுகிறது எனவும் சுப்ரமணியம் தெரிவித்தார்.
இதேவேளை தவில் தயாரிப்பும் சில நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மிகவும் சிறப்பான முறையில் நரசிங்கம்பேட்டையில் நாதஸ்வரங்கள் தயாரானாலும், அங்குள்ள கலைஞர்கள் யாருக்கும் அந்த வாத்தியத்தை வாசிக்கத் தெரியாது என்பதால், நாதஸ்வரக் கலைஞர்கள் தயாரிப்பாளர்களுடன் அமர்ந்து தமக்கு தேவையான வகையில் வாத்தியத்தை மெருகேற்றி பெற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.