Thursday, March 20, 2014

எழுத்தாளர் குஷ்வந்த் சிங் காலமானார்

பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99.

குஷ்வந்த் சிங்கின் இல்லத்தில் இன்று அவரது உயிர் பிரிந்ததாக, அவருடைய மகனும், பத்திரிகையாளருமான ராகுல் சிங் தெரிவித்தார்.
முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த தனது தந்தை இயற்கை மரணம் எய்ததாக அவர் குறிப்பிட்டார். கடைசி காலத்தில் குஷ்வந்த் சிங்குக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் ராகுல் சிங் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களுள் ஒருவரான குஷ்வந்த் சிங்கின் எழுத்தில் நையாண்டித்தனமும் அழுத்தமான கருத்துகளும் பொதிந்திருக்கும்.
தற்போதுள்ள பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள ஹதாலியில் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ல் பிறந்தார்.
யோஜனா என்ற பத்திரிகையை நிறுவியவர். தி இல்லுஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா, தி நேஷனல் ஹெரால்டு, தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.
ட்ரெயின் டூ பாகிஸ்தான், ஐ ஷேல் நாட் ஹியர் தி நைட்டிங்கேல், டெல்லி உள்ளிட்ட இவரது படைப்புகள் காலம் கடந்து பேசுபவை.
குஷ்வந்த் சிங் தனது 95-வது வயதில் 'தி சன்செட் கிளப்' என்ற நாவலை எழுதினார். இவரது சுயசரிதையை 2002-ல் பெங்குவின் புக்ஸ் வெளியிட்டது.
1980-ல் இருந்து 1986 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1974-ல் இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. ஆனால், அவ்விருதை 1984-ல் அவர் திரும்ப ஒப்படைத்துவிட்டார். பொற்கோயிலில் நுழைந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராகவே விருதை திருப்பித் தந்தார். பின்னர், 2007-ல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.