Saturday, March 1, 2014

அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்

மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய பிரத்யேகமான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கே வெறும் 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்திருக்கிறது.

பந்த்தேரா என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்கப் பிராந்தியத்தில் இருக்கும் பதினேழு நாடுகளில் தனது ஆய்வை மேற்கொண்டது.
செனகலில் துவங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் இறுதி அறிக்கையில் இந்த பிராந்தியத்துக்கே பிரத்யேகமானதும், மரபணு ரீதியில் மற்ற ஆப்ரிக்க சிங்கங்களிடமிருந்து வேறுபட்டதுமான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் வரலாற்று ரீதியில் வாழ்ந்த இடங்களில் இன்று வெறும் ஒரே ஒரு சதவீத இடங்களில் மட்டுமே அவை வாழ்வதாக தெரிவித்திருக்கிறக்கிறது.
இந்த அறிக்கையை எழுதிய ஆய்வாளர்களில் ஒருவரான பிலிப் ஹென்ஸ்ஷெசெல் இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசியபோது, சரித்திர ரீதியாக மேற்கு ஆப்ரிக்காவில் சிங்கங்கள் வாழ்ந்துவந்த அவற்றின் பாரம்பரிய வாழ்விடங்கள் 99 சதவீதம் குறைந்துள்ளது என்பது எமது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
சிங்கங்கள் வாழ்விடங்கள் விவசாயத் தேவைகளுக்காக பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டத்தே இதற்கு முக்கிய காரணம் என்றும், பருத்தி பயிர் செயவதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“கடந்த இருபது ஆண்டுகளில் பத்து நாடுகளுக்கும் மேலாக வாழ்ந்து சுற்றித்திருந்த சிங்கங்கள் இப்போது ஒரு குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களிலேயே, அதிலும் மிகவும் ஆபத்தும் அபாயமும் நிறைந்த சூழலில் வாழ்கின்றன என்பது கவலையளிக்கும் ஒரு விஷயம்", என்றும் கூறினார் ஆய்வாளர் பிலிப் ஹென்ஷெசெல்.
இந்த சிங்கங்கள் இப்படி வேகமாக அழிவின் விளிம்புக்கு சென்றுகொண்டிருப்பது தமக்கு மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்த ஹென்ஷெசெல், இவை ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் சிங்கங்களில் மரபணு ரீதியில் மாறுபட்டவை என்பதால் இவற்றின் அழிவு என்பது ஒட்டுமொத்தமாக ஒருவகையான சிங்க இனமே அழிவதாகவே அர்த்தப்படும் என்று கூறினார்.
அழிவின் விளிம்பில் நிற்கும் இந்த அரியவகை மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாக்க தேவைப்படும் நிதிவசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்பதுடன், அந்த அரசுகளுக்கு வேறுபல முன்னுரிமை விவகாரங்களும் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாப்பதற்கு சர்வதேச நிதி உதவி தேவை என்று வாதாடும் அவர், அதற்கும் முன்னதாக, இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் அழிவில் விளிம்பில் இருக்கும் அருகிவரும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அடுத்த கட்டமாக இந்த வகையான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் இயற்கையாக வாழும் பிரதேசங்களை பாதுகாக்கத் தேவையான சர்வதேச நிதி உதவியையும் உலக நாடுகள் செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.