Friday, February 28, 2014

கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு

கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையில் மத்திய அரசின் நிலைக்கு கேரளாவில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்வதாக கூறப்பட்டாலும், இன்று இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி சார்பில் கேரள மாநிலம் இடுக்கி, வயநாடு, கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு, கன்னூர் மாவட்டங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
"மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பரப்பளவில் 41% பகுதி உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பகுதி; அதில் 37% பகுதி சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதி (ஈகோ சென்சிடிவ் ஏரியா); இதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்" என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்தது.
இதனால், மலை கிராமங்களின் மக்கள் மத்தியில் தாங்கள் எந்நேரமும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதி (ஈகோ சென்சிடிவ் ஏரியா) இருந்து அதிக மக்கள் தொகை கொண்ட 47 கிராமங்களை நீக்குவதில் மத்திய மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதால் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.