Thursday, January 16, 2014

மதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம்

நீர் மேலாண்மையில் முற்கால பாண்டிய மன்னர்கள் சிறந்து விளங்கியதாக தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம் தெரிவித்தார்.
கூத்தியார்குண்டு மற்றும் நிலையூர் கண்மாயில் சமீபத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது நிலையூர் கண்மாய் குறித்து தொல்லியல் அறிஞர் வெ. வேதாசலம் கூறியது:
நீர்நிலைகளை உருவாக்கு வதிலும், அவற்றைப் பேணுவதிலும் முற்கால பாண்டியர்கள் ஆற்றிய பணி மகத்தானது. மதுரை மாவட்டத்தின் மிகப் பெரிய கண்மாயாகத் திகழ்ந்த நிலையூர் ஏரி, பாண்டிய மன்னர் பராந்தக வீரநாராயணன் என்பவரின் (கி.பி. 866 முதல் –கி.பி.910 வரை) ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.
முற்காலத்தில் ‘நாட் டாற்றுக்கால்’ என்றழைக்கப்பட்ட அந்தக் கால்வாயே, தற்போது நிலையூர் கால்வாய் என்றழைக்கப்படுகிறது. இக்கால்வாயின் மூலம் நிலையூர் உள்பட ஆறு கண்மாய்கள் தண்ணீரைப் பெறுகின்றன. மேலும், பாசனத்துக்காக நிலையூர் கண்மாயில் உள்ள மடையிலிருந்து தண்ணீர் வெளியேறும் கண், மடைத் தொட்டியிலிருந்து நிலங்களுக்கு நீர் பிரிக்கும் முறை ஆகியன பண்டைய தமிழர்களின் நுட்பமான நீர் மேலாண்மைக்கு அரிய சான்றாக விளங்குகின்றன என்றார் அவர்.
கூத்தியார்குண்டு கிராமம் குறித்து, முனைவர் ரா. வெங்கட்ராமன் பேசியது: கிருஷ்ணதேவராயரின் பிரதிநிதியாக மதுரையில் ஆட்சி புரிந்தவர் திருமலை நாயக்கர். இவரது தளபதியாக பல போர்களில் வெற்றிவாகை சூடிய தளவாய் ராமசுப்பையன் பிறந்த ஊர்தான் கூத்தியார்குண்டு.
பாண்டிய மன்னர்களின் அரண்மனையில் ஆடல்புரியும் மகளிருக்காக, இவ்வூரில் உள்ள நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே, இந்த ஊர் கூத்தியார்குண்டு எனவும், அதற்கு முன் வேதங்களை கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு இவ்வூர் தானமாக வழங்கப்பட்டதால், சதுர்வேதிமங்கலம் எனவும் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.