Sunday, January 26, 2014

குடியரசு தின அணிவகுப்பு

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா (படம்: சந்தீப் சக்சேனா)65-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் காலை 10 மணிக்கு நடந்த விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக, குடியரசு தின விழாவின் தொடக்கமாக, உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்காக, இந்தியா கேட்டிலுள்ள அமர்ஜவான் ஜோதிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்றனர்.
அங்கு, நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களைப் போற்றும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைப்படை வீரர்கள் புடை சூழ ராணுவ வீரர்கள் அணி வகுத்து அழைத்து வந்தனர். குடியரசுத் தலைவருக்கு முப்படை தளபதிகள் வரவேற்பு அளித்தனர். ராஜபாதைக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வரவேற்றார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றியதும், வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு அசோக சக்கர விருதுகள் வழங்கினார்.
இதைத் தெடர்ந்து முப்படைகளின் அணி வகுப்பு நடந்தது. அதில், இந்திய ராணுவத்தின் வல்லமையை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்திகள், ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், அக்னி ஏவுகணைகள், போர் விமானங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட பின், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலம் சார்பில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், இந்தியப் பாரம்பரியத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெற்றன.
இந்தியாவின் வேற்றுமையின் ஒற்றுமை மற்றும் ராணுவ வல்லமையை பறைசாற்றும் வகையில், செங்கோட்டை வரையிலான அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர்.
இந்தியாவின் 65-வது குடியரசு தின விழாவில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும், அவரது மனைவியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.